புதுடெல்லி: இந்தியாவை 250 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தவர்களை, பொருளியல் ரீதியில் முந்தியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் அனைவரும் ஒருங்கிணைந்து, உறுதியாகச் செயல்பட்டு, உலகின் மூன்றாவது ஆகப்பெரிய பொருளியலாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, கடந்த 2014ஆம் ஆண்டு தாம் முதல் முறையாக பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து இந்தியப் பொருளியல் உலக அளவில் 11ஆவது இடத்தில் இருந்தது என்றும் தற்போது நான்காவது ஆகப்பெரிய பொருளியலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தற்போது ஜப்பானை விஞ்சிவிட்டாலும், இந்தியர்கள் வெளிநாட்டுப் பொருள்களை அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“முன்பு இந்தியா உலகப் பொருளியல் வரிசையில் ஆறாவது இடத்தில் இருந்தது.
“அது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியபோது, நாடு முழுவதும், குறிப்பாக, இளையர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகத்தை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்.
காரணம், 250 ஆண்டுகளாக நம்மை ஆளுமை செய்தவர்களை நாம் அப்போது முந்திச்சென்றோம்,” என்றார் மோடி.
இந்திய வணிகர்கள் எவ்வளவு லாபம் கிடைத்தாலும், வெளிநாட்டுப் பொருள்களை விற்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
வணிகர்கள் இதற்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் ஒரு நாளில் தம்மையும் அறியாமல் இந்தியர்கள் ஏராளமான வெளிநாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் பிரதமர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“துரதிஷ்டவசமாக பிள்ளையார் சிலைகளைக்கூட வெளிநாடுகளில் இருந்துதான் இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்கிறார்கள். அச்சிலைகளின் கண்கள் மிகச் சிறியதாக உள்ளன.
“ஹோலிப் பண்டிகைக்காகப் பயன்படுத்தும் வண்ணப்பொடிகளும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை. இப்படி நிறைய பொருள்களைப் பயன்படுத்துகிறோம்,” என்றார் பிரதமர் மோடி.
இந்தியா வளர்ந்த நாடாக உருவாக வேண்டுமானால், உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டியது மிக அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“’ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, இந்தியாவின் ராணுவ பலத்தைக் கொண்டு தொடங்கியது. இனி அது இந்திய குடிமக்களின் பலத்தோடு முன்னெடுத்துச் செல்லப்படும்.
“’ஆபரேஷன் சிந்தூர்’ என்பது நமது படைகள் கைகளில் மட்டுமில்லை 140 கோடி இந்தியர்களின் கைகளிலும் உள்ளது.
“நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் இருக்க வேண்டும்,” என்றார் பிரதமர் மோடி.