புதுடெல்லி: பாகிஸ்தானுடனான மோதலை நிறுத்தும்படி, இந்தியாவை யாரும் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக, உலக நாடுகளுக்கு விவரிக்க இந்திய அரசு சில குழுக்களை அமைத்துள்ளது. அவற்றுள் சசிதரூர் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒரு குழு, செவ்வாய்க்கிழமை பிரேசில் சென்றடைந்தது.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சசிதரூர், பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தம் தொடர்பில் மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“இந்தியா ஒருபோதும் போரை விரும்பவில்லை. எனவே போர் நிறுத்தத்துக்கு யாரும் எங்களை வற்புறுத்த வேண்டிய தேவையில்லை.
“ஒருவேளை, பாகிஸ்தான் தரப்பை யாரேனும் வற்புறுத்தி இருக்கக்கூடும். மே 7ஆம் தேதியில் இருந்தே மோதலை நீடிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை எனக் கூறிவந்தோம்,” என்றார் சசிதரூர்.
இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கவே ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கினார்.
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான மோதலை நிறுத்த அமெரிக்கா உரிய முயற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், இந்திய தரப்பு இதைத் திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், பிரேசில் செய்தியாளர் சந்திப்பின்போது, “அமெரிக்க அதிபர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. அந்த மரியாதையை மனதில் வைத்தே நாங்கள் பேசுவோம்,” என்றார் சசிதரூர்.
தொடர்புடைய செய்திகள்
இவரது தலைமையிலான குழு அடுத்து அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், பாகிஸ்தானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர மூன்றாம் தரப்பின் உதவி தேவையில்லை என சசிதரூர் மீண்டும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
சசிதரூர் தலைமையிலான குழு, பிரேசிலில் இருந்து அடுத்ததாக அமெரிக்கா செல்கிறது. இந்த நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் வெளிப்படுத்தி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இதனிடையே, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை இந்த மாதமே கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அது முடியாத காரியம் என மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
எனவே, ஜூலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.