மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி: இதுவரை 1.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்

மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி: இதுவரை 1.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்

2 mins read
40854e47-fe7c-49ea-9088-047deead2a75
மொத்தம் இருந்த 13.77 கோடி வாக்காளர்களில், முகவரியில் இல்லாதவர்கள், வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என 1.58 கோடிப் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன. இது மொத்த வாக்காளர்களில் 11.51 விழுக்காடு ஆகும். - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையில் இதுவரை ஏறக்குறைய 1.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டன.

டெல்லி, ஒடிசா, மிசோராம், சிக்கிம், மணிப்பூர், உத்தரகாண்ட், ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தெலுங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மேகாலயா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா, தாத்ரா, நகர் ஹவேலி, டையூ, டாமன் என மொத்தம் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி நடைபெறுகிறது.

இதுவரை 12 மாநிலங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 13.77 கோடி வாக்காளர்களில், பதிவு செய்த முகவரியில் இல்லாதவர்கள், வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என 1.58 கோடிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் 11.51 விழுக்காடு ஆகும்.

யூனியன் பிரதேசங்களான தாத்ரா-நகர் ஹவேலி, டையூ-டாமனில் அதிகபட்சமாக 29.64 விழுக்காட்டு வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். மாநில அளவிலான நீக்கத்தில் அருணாச்சலப் பிரதேசம் (19.09%), உத்தரகாண்ட் (16.48%), ஹரியானா (16.38%) ஆகியவை முன்னணியில் உள்ளன.

ஆந்திர மாநிலத்தில் மட்டும் 44.89 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

ஹரியானாவில் 33.83 லட்சம் வாக்காளர்கள், ஒடிசாவில் 20.12 லட்சம் வாக்காளர்கள், சிக்கிமில் 37,724 வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர்.

வாக்காளர் பட்டியலைத் துல்லியமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றக் கதவுகளைத் தட்டின. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் இந்தப் பணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, பணிகள் வேகமெடுத்துள்ளன.

சரியான வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அரசுத் தரப்பு விளக்கமளித்தாலும், தகுதியான வாக்காளர்கள் யாரேனும் விடுபட்டுள்ளனரா என்ற அச்சமும், தங்களின் பெயர்களை மீண்டும் சரிபார்க்கும் பரபரப்பும் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்