தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஆறு லட்சம் பேர் வருகை

16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயில் மகா குடமுழுக்கு

2 mins read
cbf9133e-9eb8-42b8-9e74-b494af924350
ராஜ கோபுரத்தில் இருக்கும் கும்ப கலசங்களுக்கு அர்சசகர்கள் குடத்தில் இருந்து புனித நீரை ஊற்றுகின்றனர். - படம்: ஊடகம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ஆம் தேதி சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.

இந்தக் கோவிலில் கடந்த 2.7.2009 அன்று மகா குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு ராஜகோபுரத்தின் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதேநேரத்தில் கோவில் விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தமிழ் வேதங்கள் ஓதப்பட்டன.

கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோரும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்தனர்.

கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை கண்டுகளிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. குடமுழக்கு விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் 6000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 6 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்