சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசை எதிர்த்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, சென்னை புரசைவாக்கம் பகுதியில் தமிழக பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாவட்டத் தலைவர் கிரி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்று கையில் அகல் விளக்குகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது தவறு. அந்த மனுவை அரசு திரும்பப் பெற வேண்டும். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாநகரக் காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், “தீபம் ஏற்றப்படும் நாளில் திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கும் நிலையில், அரசின் வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், அரசு உயர் அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
