திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு

திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு

2 mins read
80accd9d-be60-449d-94a2-1191f2635417
ஏற்கெனவே 13 பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) உயிரிழந்துவிட்டார். - படம்: என்டிடிவி

சென்னை: திருவள்ளூர் ஆலை அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்துவிட்டதாக தமிழக அரசு வியாழக்கிழமை (ஜூன் 25) அறிவித்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த ஒரு பெண் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

உயிரிழந்தோரில் இருவர் 15 வயது இளம்பெண்கள்.

மேலும், அவர்களில் 11 பேர் ஒடிசா மாநிலத்தையும் இருவர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

“வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறல், கண்கள் மற்றும் சுவாசப் பாதையில் எரிச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்பட்டனர்,” எனவும் அது கூறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால்’ என்ற பெயரில் கடலுணவு பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஞாயிறன்று (ஜூன் 21) அந்த ஆலையில் பனிக்கட்டி தயாரிக்கும் இயந்திரத்துக்குச் செல்லும் பாதையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.

அந்தச் சம்பவத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வாயுக்கசிவுடன் தொடர்புடைய தொழிற்சாலையின் உரிமையாளர்களான எம். ஜோசப் ஜெகன், எம். மோகன், மேலாளர் ஆர். டேனியல் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

வாயுக்கசிவு ஏற்பட்டதற்கான சூழலை விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு மூவர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில், “விபத்து நடந்த ஆலையில் கடந்த டிசம்பர் மாதம் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்பிறகு முறையாக ஆய்வு நடத்தாததே விபத்துக்குக் காரணம்,” என சிஐடியு தொழிற்சங்கம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்