புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் இந்தியாவின் பல்வேறு மொழிகளை இணைக்கும் பாலமாக பாஷா சங்கம் செயல்படுகிறது.
இச்சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் எனப் பல தமிழ்க் கவிஞர்களுக்கு ஏற்கெனவே விழா எடுக்கப்பட்டுள்ளது.
பாஷா சங்கத்தின் நிறுவனரும் மறைந்த பொதுச் செயலாளருமான கிருஷ்ணசந்த் கவுடு, தமிழ் கற்றவர். திருவள்ளுவர் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.
முதன்முதலில் 1990ஆம் ஆண்டு, திரிவேணி சங்கமத்தின் தென்கரைச் சாலைக்குத் திருவள்ளுவர் பெயரைச் சூட்டி, அங்கு வள்ளுவருக்குச் சிலை வைக்கக் கோரினார் அவர்.
2009ஆம் ஆண்டில் தமிழரான எம்.கோவிந்தராஜன் இந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளரானார்.
திரு கவுடுக்குப் பிறகு தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், அலகாபாத் மாநகராட்சி 2011ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் சாலையின் பெயர் மற்றும் சிலைக்கு அனுமதி வழங்கியதாக இந்து தமிழ் திசைக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.
மாநகராட்சி உத்தரவை 2017ல் பெற்றதை அடுத்து அந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி திருவள்ளுவர் பெயரைத் தென்கரைச் சாலைக்குச் சூட்டி விழா நடத்தியதாக அவர் கூறினார். ஆனால் அந்த இடம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதாகக் கூறி அலகாபாத் வளர்ச்சி ஆணையம், சிலை வைக்கத் தடை விதித்ததாகவும் தற்போது தடைகளை விலக்கி மாநில அரசே சிலை வைப்பதாகவும் அவர் சொன்னார்.
மாமல்லபுரத்தில் வாங்கப்பட்ட சிலை, ஜனவரி 12ஆம் தேதி பிரயாக்ராஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மகா கும்பமேளாவுக்கு வரும்போது திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.