திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அசம்பாவிதம்: ஒருவர் மரணம், மூவர் காயம்

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அசம்பாவிதம்: ஒருவர் மரணம், மூவர் காயம்

1 mins read
ceffb26e-2a4d-4343-a1b6-9c84548a3c59
கயிறு திடீரென அறுந்ததில் விளக்குகள் ஊழியர்கள் மீது விழுந்தன. படம்: மாத்ருபூமி -

திருவனந்தபுரம் விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) ஊழியர்கள் 'ஹை-மாஸ்ட்' விளக்குகளைப் பொருத்திக்கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டது.

இதில் ஒருவர் உயிரிழந்தார்; மூவர் காயமுற்றனர். இறந்தவர் பெட்டா எனும் சிற்றூரைச் சேர்ந்த அனில் குமார் என்பவர். அவருக்கு வயது 48. உடற்கூறு ஆய்வு மேற்கொள்வதற்காக அவரது உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காலை 10.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கயிற்றைக் கொண்டு அவர்கள் விளக்குகளை உயர்த்திக்கொண்டு இருந்தபோது கயிறு திடீரென அறுந்துவிட்டது. இதனால் விளக்குகள் ஊழியர்கள் மீது விழுந்தன.

"இந்தச் சம்பவத்தால் விமான நிலைய செயல்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை," என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.