தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரேநாளில் 2.17 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இதுதொடர்பாக, அத்துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் கடந்த 5ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு லட்சத்து 17,332 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம் இதற்கு முன்பு கையாண்ட 2 லட்சத்து 16,631 மெட்ரிக் டன் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “நிலக்கரி 62,466 டன், அனல்மின் நிலக்கரி 49,067 டன், சுண்ணாம்புக் கல் 20,671 டன், கந்தக அமிலம் 10,188 டன்,செம்பனை எண்ணெய் 5,400 டன், சர்க்கரை 1,771 டன், பொதுச் சரக்குகள் 774 டன், காற்றாலை இறக்கைகள் 68 டன், 66,927 டன் சரக்குப் பெட்டகச் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 2026 ஆகஸ்ட் மாதத்தில் துறைமுகம் 35.35 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது, 2025 ஆகஸ்ட் மாதத்தில் கையாளப்பட்ட 32.33 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், 9.36 விழுக்காட்டு வளர்ச்சி,” என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், துறைமுகம் மொத்தமாக 18.27 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 2.10 விழுக்காட்டு வளர்ச்சியாகும். துறைமுகத்தில் உள்ள உயர்திறன் பாரந்தூக்கிகளின் பயன்பாடு, அதிக அளவிலான சரக்குகளைக் கையாள உதவியதாகக் கூறப்பட்டது.
மேலும், “எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக சரக்குத் தளம்-7 நவீன சரக்குப் பெட்டக முனையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சரக்குத் தளம் 10 உருவாக்குதல், வடக்கு சரக்குத் தளம்-3 இயந்திரமயமாக்கல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி கூடுதலாக, 40 ஏக்கர் பரப்பில் விரிவாக்கப்பட்டு வருகிறது.
“வஉசி துறைமுகம் இந்தச் சாதனையை எட்டுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. வரவிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவடைந்ததும், துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறன் மேலும் அதிகரித்து, கிழக்குக் கடற்கரையின் முக்கியக் கடல்சார் நுழைவாயிலாக வலுப்பெறும். வட்டாரப் பொருளியல் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் துறைமுகம் வழங்கும்,” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


