திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்ய கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், சபரிமலைக் கோவில் தங்கத்தைத் திருடியவர்கள் தப்ப முடியாது என்று கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை விசாரித்த நீதிபதி பதருதீன், தமக்கு பிணையை ரத்து செய்வதில் விருப்பம் என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டார்.
தங்கம் திருடுபோனது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார் கண்டரரு ராஜீவர்.
ஐம்பது நாள்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அவர், கொல்லம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தங்கம் திருடுபோன காலகட்டத்தில் தலைமை அர்ச்சகராக இருந்தார் ராஜீவர் என்றும் அவருக்குப் பல்வேறு முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இருந்தது என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு சுட்டிக்காட்டி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சபரிமலை தங்கம் திருடப்பட்ட விவகாரம், இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், ஐயப்பன் கோவிலுக்குச் சொந்தமான தங்கம் காணாமல்போனது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் கடவுள் சொத்தைக் கொள்ளையடித்த எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

