புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டினார்.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் வீரர்களின் தியாகத்தை ஒவ்வோர் இந்தியரும் போற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய ராணுவத்தின் டிரோன்கள், ஏவுகணைகள், பயங்கரவாத முகாம்களை அழித்தபோது, பயங்கரவாதிகள் மட்டுமல்ல அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக மோடி கூறினார்.
மும்பை தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் தற்போது அழிக்கப்பட்ட முகாம்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகத் தெரிவித்த அவர், பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூர், முர்ட்கே உள்ளிட்ட இடங்கள் இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“இந்தியப் பெண்களின் குங்குமத்தை அழித்ததற்கான விளைவுகளை அவர்கள் சந்தித்துள்ளனர். பயங்கரவாதிகளின் தலைமையகங்களைத் தாக்கி அழித்தோம். இத்தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஒரே தாக்குதலில் உலகளவில் பல பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் பாகிஸ்தான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அவர்கள் நடத்திய தாக்குதலில் நமது கோவில்கள், பள்ளிகள் பாதிப்படைந்தன,” என்றார் பிரதமர் மோடி.
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல என்றும் அது நீதிக்கான உறுதிமொழி என்றும் அவர் கூறினார். இந்திய படையினருக்கு தலைவணங்குவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாகவும் தேசத்தின் அனைத்துப் பெண்களுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தனிப்பட்ட முறையில் தம்மை மிகவும் காயப்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், அதன் பிறகு இந்தியப் நமது பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றார்.
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது
இந்தியா எந்தவொரு அணுசக்தி மிரட்டலையும் பொறுத்துக்கொள்ளாது என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும், எதிர்காலம் என்பது அவர்களின் நடத்தையைப் பொறுத்தே அமையும் என்றும் கூறினார்.
“நமது ஏவுகணைகள், டிரோன்களுக்கு முன் பாகிஸ்தானின் ஆயுதங்கள் ஒன்றும் இல்லாமல் ஆயின. நமது பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் தப்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. உலக நாடுகள் முன் கதறியது. நமது ராணுவ நடவடிக்கையை தான் நாம் நிறுத்தி உள்ளோம். முப்படைகளும் உஷார் நிலையில் போருக்கு தயாராக இருக்கிறது. அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் நம்மிடம் கெஞ்சினர்.
அணு ஆயுதப்போரை தடுத்தது அமெரிக்கா: டிரம்ப்
இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் சூழலைத் தாம் தலையிட்டுத் தடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருதரப்பினரும் தீவிரமடைந்து வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்யப்போவதில்லை என அமெரிக்கா கடுமையாக எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, சண்டை நிறுத்தம் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் அறிவிப்பதற்கு முன்பே அதிபர் டிரம்ப், தமது சமூக ஊடகப் பக்கத்தில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது சர்ச்சையானது.
பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடத் தயார் என அவர் கூறியதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.