கௌகாத்தி: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆண் புலி ஒன்றை அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவின் அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டம், துசுத்திமுக் எனும் சிற்றூரில் வியாழக்கிழமை (மே 22) நிகழ்ந்தது.
அவ்வூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை அந்த ‘ராயல் பெங்கால்’ புலி கொன்றதுதான் அதற்குக் காரணம். ஈட்டி, வெட்டுக்கத்தி, இரும்புத்தடி போன்றவற்றுடன் திரண்ட கும்பல், அந்த ஆண் புலியைக் கொன்றதோடு நில்லாது, அதனுடைய கால், காது, தோல், பல் போன்றவற்றைத் துண்டாக்கி, நினைவுப்பொருள்களாகவும் எடுத்துச் சென்றனர்.
அது ‘மனிதனைக் கொல்லும் புலி’ எனக் குறிப்பிட்ட உள்ளூர்வாசிகள், கடந்த மாதம் அருகிலுள்ள சிற்றூரில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததற்கு அப்புலியே காரணம் எனக் குறிப்பிட்டனர். அத்துடன், அண்மைக்காலமாக ஏற்பட்ட கால்நடைகளின் இழப்பிற்கும் அதுவே காரணம் என்றனர்.
இந்நிலையில், புலியைக் கொன்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் எம்எல்ஏ மிருணாள் சைக்கியா வலியுறுத்தியுள்ளார்.
“இந்த நிகழ்வு மிகுந்த மனவலியைத் தருகிறது. இந்தப் புவி மனிதர்களுக்கு மட்டுமானதன்று, மற்ற உயிரினங்களுக்குமானது. காட்டு விலங்குகளுக்கும் வாழ இடம் தேவை,” என்றார் திரு சைக்கியா.
அக்கும்பல் அந்தப் புலியைக் காட்டுக்குள் விரட்டிச் சென்று கொன்றதாக கோலாகாட் மாவட்ட வனத்துறை அதிகாரி குணதீப் தாஸ் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கும்பலிடமிருந்து புலியைக் காப்பாற்றும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்.

