வாஷிங்டன்: அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சின் கொள்கை மாற்றத்தால் அந்நாட்டில் வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் வேலைசெய்யத் தேவைப்படும் ‘இஏடி’ எனப்படும் வேலை அனுமதிச்சீட்டு இனித் தானாகவே புதுப்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 30) முதல் நடப்பிற்கு வந்துள்ளது.
“அக்டோபர் 30ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு ‘இஏடி’ புதுப்பிப்பிற்கு விண்ணப்பம் செய்யும் வெளிநாட்டவர்களுக்குத் தானாகவே அதற்கான நீட்டிப்பு வழங்கப்படாது,” என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
இதுநாள்வரை, தங்களது ‘இஏடி’ புதுப்பிப்பு விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தால் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் 540 நாள்கள்வரை வேலையில் தொடர முடிந்தது.
புதிய விதியின்படி, தற்போதைய ‘இஏடி’ காலாவதியாகுமுன் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் ஏற்கப்படாத எவரும் உடனடியாக வேலைசெய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதனால், ‘இஏடி’யைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பும் வெளிநாட்டினர், தங்களது வேலை அனுமதி காலாவதியாவதற்கு 180 நாள்களுக்கு முன்பே அதற்கு விண்ணப்பம் செய்ய அமெரிக்கக் குடியுரிமை, குடிநுழைவுத் துறை பரிந்துரைக்கிறது.
அத்தகைய புதுப்பிப்பு விண்ணப்பங்களைப் பரிசீலிக்க மூன்று முதல் 12 மாதங்கள்வரை ஆகலாம்.
அமெரிக்காவில் வேலைசெய்யும் வெளிநாட்டினரில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், புதிய விதியால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே அமெரிக்க நிரந்தரவாசத் தகுதிக்காகவும் (கிரீன் கார்டு) விசாவிற்காகவும் விண்ணப்பம் செய்து ஏராளமான இந்தியர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தரவாசத் தகுதிக்காக இந்தியர்கள் சிலர் 20 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அத்தகையோர் அவ்வப்போது இடைக்கால வேலை அனுமதியையும் அவ்வப்போது அதனைப் புதுப்பிப்பதையும் சார்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில், புதிய விதியால் பெரிய அளவில் வேலை இழப்புகளும், வருமான இழப்பும், குடும்பங்களுக்கான விசா தகுதி விதிமீறல்களும் இடம்பெறலாம் எனக் குடிநுழைவுச் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
“புதிய விதியால், அமெரிக்காவைத் தங்கள் வீடாகக் கருதும் தேர்ச்சிமிகு இந்திய ஊழியர்கள் உள்ளிட்டோர் கட்டாயமாக வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். ஒருநாள் தாமதம்கூட வேலை செய்வதற்கான அவர்களின் சட்ட உரிமையைப் பறித்துவிடலாம்,” என்று நியூஜெர்சியைச் சேர்ந்த குடிநுழைவு ஆலோசகர் ஒருவர் கூறினார்.

