பெங்களூரு: ஏறத்தாழ 11,000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் கடலோரப் பகுதிகள் வெப்பநிலை உயர்வு அபாயத்தை எதிர்நோக்குகின்றன.
கிட்டத்தட்ட 40 கடலோர மாவட்டங்களில் கோடைக்காலத்தில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ்வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பெரும்பாலான மாவட்டங்கள் தமிழ்நாடு, கேரள மாநில மாநிலங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை (மே 29) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அச்சுறுத்தும்படியாக அமைந்துள்ளன. கேரளத்தின் எர்ணாகுள மாவட்டம் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 1.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வைப் பதிவுசெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வெப்பநிலை உயர்விற்கேற்ப வாழ்க்கையைத் தகவமைத்துக்கொள்வதற்கான கால அவகாசமும் மிக வேகமாகச் சுருங்கி வருவதாக அவ்வறிக்கை எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யும் என்றும் குறிப்பாக, குஜராத்தின் சூரத்தில் 23 விழுக்காடு கூடுதலாக பருவமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2050ஆம் ஆண்டிற்குள் கடல்மட்டம் 15 சென்டிமீட்டர்வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிப்பிடத்தையும் வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிடும் எனச் சொல்லப்படுகிறது.
வெப்பமண்டலச் சூறாவளிகள் காரணமாக கடலின் மேற்பரப்பு வெப்பநிலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு 0.27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அந்த உயர்வு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தரவானது, நாம் இனிமேலும் புறக்கணிக்க முடியாத, உண்மைநிலையை எடுத்துக்காட்டும் கண்ணாடி போன்றது. எர்ணாகுளத்தில் வளிமண்டல வெப்பநிலை உயர்வானாலும் சரி, சுந்தரவனக் காடுகளில் அதிகரித்துவரும் உப்புத்தன்மையாக இருந்தாலும் சரி, நம் அன்றாட வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் பாதிப்புத்தன்மை தெளிவாகத் தெரிகிறது,” என்று பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம், நீடித்த நிலைத்தன்மைக் கழகத்தின் இயக்குநர் ஹரினி நாகேந்திரா தெரிவித்துள்ளார்.

