தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பங்ளாதேஷியர் மூவர் கைது

1 mins read
f413668d-4caf-40f5-b411-9455c1d9e6fa
கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றதாகக் கூறி கைதுசெய்யப்பட்ட பங்ளாதேஷியர் இருவருடன் எல்லைப் பாதுகாப்புப் படையினர். - படம்: ஏஎன்ஐ

அகர்தலா: கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்றதாகக் கூறி, கடந்த இரு நாள்களில் பங்ளாதேஷியர் மூவரை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை கைதுசெய்துள்ளது.

எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ அவர்களுக்கு உதவி செய்ததாகக் கூறி, திரிபுரா மாநிலம், குரங்கோலா எனும் சிற்றூரைச் சேர்ந்த இந்தியர் ஒருவரும் பிடிபட்டார்.

திரிபுரா மாநிலக் காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை மூலம் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) எல்லைப் பாதுகாப்புப் படை ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவைச் சேர்ந்த இருவர், திரிபுராவின் சிபாகிஜலா மாவட்டம், ரஹீம்பூர் எல்லைச் சாவடி அருகே கடந்த புதன்கிழமையன்று பிடிபட்டதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்னொருவர், வியாழக்கிழமையன்று மேற்கு திரிபுரா மாவட்டம், மோகன்பூர் எல்லைச் சாவடி அருகே கைதுசெய்யப்பட்டார். அவர் பங்ளாதேஷின் சப்பாய்நவாப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று ‘ஏஎன்ஐ’ செய்தி கூறியது.

இதனிடையே, எல்லைப் பாதுகாப்புப் படை, அகர்தலா ரயில்வே காவல்துறை, திரிபுரா காவல்துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட இருவேறு கூட்டு நடவடிக்கைகளில், பங்ளாதேஷியர் இந்தியாவிற்குள் கள்ளத்தனமாக நுழைய உதவியதாகக் கூறி மேலும் மூன்று இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, திரிபுரா மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் ஊடுருவ உதவும் இடைத்தரகர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர்மீதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்