புதுடெல்லி: ஒடிசா மாநிலம், பூரியில் நடைபெற்ற ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட மூவர் இறந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் அறுவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் பூரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் சங்கர் ஸ்வைன் உறுதிப்படுத்தினார்.
ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அதிகாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஜெகநாதர் கோயிலிலிருந்து ஜெகநாதர், பாலபத்ரர், தேவி சுபத்ரா ஆகிய சிலைகளுடன் மூன்று ரதங்களின் யாத்திரை புறப்பட்டன.
தரிசனத்திற்காக ஏராளமானோர் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
உயிரிழந்தவர்கள் பிரபாதி தாஸ், பசந்தி சாஹு, 70 வயதான பிரேமகாந்த் மொஹந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மூவரும் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ரத யாத்திரையைக் காண பூரிக்கு வந்தவர்கள் என்றும் தெரிகிறது.
சம்பவ இடத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் ஏற்பாடு போதுமானதாக இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையில்தான் இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் பூரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் கூட்டம் திடீரென கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.
மன்னிப்புக் கோரிய முதல்வர்
இந்த விபத்துகுறித்து ஒடிசா முதல்வர் சரண் மாஞ்சி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பக்தர்கள் மத்தியில் மஹாபிரபுவையும், சாரதாபாலியையும் காண்பதற்காக ஏற்பட்ட பெரும் ஆர்வம் காரணமாக துரதிர்ஷ்டவசமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்காக நானும் எனது அரசாங்கமும் ஜெகநாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

