புதுடெல்லி: வெளிநாட்டவர் மூவர் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளைக் கடத்தி வந்ததாகக் கூறி டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
இருவேறு சம்பவங்களில் கைதுசெய்யப்பட்ட அவர்களில் இருவர் பிரேசிலைச் சேர்ந்த பெண்கள், இன்னொருவர் கென்ய ஆடவர் என்று ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 9) சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலாவது சம்பவத்தில், கடந்த ஜனவரி 28ஆம் தேதி பிரேசிலின் சாவ் பாவ்லோவிலிருந்து பாரிஸ் வழியாக டெல்லி வந்தடைந்த 26 வயதுப் பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, போதைமருந்து நிரப்பப்பட்ட குப்பிகளைத் தான் விழுங்கி இருப்பதாக அப்பயணி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உரிய மருத்துவ முறைகள் மூலம் அவரது வயிற்றினுள் இருந்த 98 குப்பிகள் அகற்றப்பட்டன. அவற்றில் ரூ.12.99 கோடி மதிப்புள்ள 866 கிராம் கொக்கைன் இருந்தது. அதனையடுத்து, அப்பெண் பயணி கைதுசெய்யப்பட்டார்.
அவரைப் போலவே, ஜனவரி 24ஆம் தேதி டெல்லி வந்திறங்கிய இன்னொரு பிரேசில் பெண்ணிடமிருந்தும் 100 குப்பிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றிலிருந்த 802 கிராம் கொக்கைனின் மதிப்பு ரூ.12.02 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே நாளில் கென்யாவிலிருந்து வந்த ஆடவர் ஒருவர் கொக்கைன் நிரப்பப்பட்ட குப்பிகளை விழுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் 996 கிராம் கொக்கைன் இருந்தது என்றும் அதன் மதிப்பு ரூ.14.94 கோடி என்றும் கூறப்பட்டது.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவிற்குப் போதைப்பொருளைக் கடத்த பெரிய கும்பல் ஒன்று இயங்கி வருகிறது என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

