புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் 100 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடத்திய மூவர் பிடிபட்டுள்ளனர்.
அந்த மாவட்டத்தின் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினர், கொர்தா-சந்தக்கா சாலையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படியான காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது அந்த வாகனத்திற்குள் 101 கிலோ கஞ்சா இருந்தது. ஒடிசாவின் கந்தமால் என்னும் இடத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்திற்கு அந்த போதைப்பொருள் கடத்திச் செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, அந்த வாகனத்தில் இருந்த மூன்று ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்து 101 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், மூவரின் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.