புதுடெல்லி: இந்தியக் கடற்படை ரகசியங்களைப் பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு விற்றது தொடர்பான ‘விசாகப்பட்டின உளவு’ வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி இந்தியர் மூவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைதுசெய்துள்ளது.
அவர்களில் வேதன் லட்சுமண் தண்டல், அக்ஷய் ரவி நாயக் என்ற இருவரும் கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தில் பிடிபட்டனர். பி.ஏ. அபிலாஷ் என்ற ஆடவர் கேரளத்தின் கொச்சியில் கைதுசெய்யப்பட்டார்.
அம்மூவரும் சமூக ஊடகம் வழியாக ஐஎஸ்ஐ அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
கார்வாரிலும் (கர்நாடகா) கொச்சியிலும் உள்ள கடற்படைத் தளங்கள் குறித்த விவரங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டதாகவும் அதற்கு ஈடாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
விசாகப்பட்டின உளவு வழக்கில் மேலும் ஐவர்மீது என்ஐஏ குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் இவ்வழக்கை முதலில் ஆந்திர மாநிலப் புலனாய்வுப் பிரிவு கையாண்டது. அதற்கு ஈராண்டுகளுக்குப் பிறகு, அவ்வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.