அமெரிக்கத் தாக்குதலில் இந்தியக் கடலோடிகள் மூவர் கொல்லப்பட்டனர்

அமெரிக்கத் தாக்குதலில் இந்தியக் கடலோடிகள் மூவர் கொல்லப்பட்டனர்

2 mins read
e595d081-d248-4d5b-bc4b-ea489df6b0cf
அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ‘எம்டி செட்டபெல்லோ’ எண்ணெய்க் கப்பல். - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: ஓமான் கடற்பகுதியில் இவ்வாரத் தொடக்கத்தில் எண்ணெய்க் கப்பல் ஒன்று அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்டதில், அதிலிருந்த இந்தியக் கடலோடிகளில் மூவர் காணாமல் போனதாகத் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அம்மூவரும் உயிரிழந்துவிட்டதையும் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டதையும் இந்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் உறுதிப்படுத்தியுள்ளார்.

பலாவ் நாட்டுக் கொடியுடன் சென்ற ‘எம்டி செட்டபெல்லோ’ என்ற அந்த எண்ணெய்க் கப்பலில் 24 இந்தியர்கள், பாகிஸ்தானியர் இருவர், உக்ரேனியர் ஒருவர், ரஷ்யர் ஒருவர் என மொத்தம் 28 ஊழியர்கள் இருந்தனர்.

ஈரான் துறைமுகங்கள்மீதான அமெரிக்காவின் முற்றுகையை மீறி, அங்கிருந்து எண்ணெய்யை ஏற்றிச் செல்ல முயன்றதாலும், தமது படைகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்ததாலும் அக்கப்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியத் தளபத்தியம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பலிலிருந்து 21 இந்தியக் கடலோடிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும், ஆதித்ய சர்மா, சிவானந்த் சௌராசியா, தலைமைப் பொறியாளர் பட்நாலா சுரேஷ் என்ற மூவரும் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் உயிரிழந்துவிட்டது உறுதியாகியுள்ளது.

மாண்டோரின் உடல்களையும் மீட்கப்பட்ட வீரர்களையும் உடனடியாக தாயகம் கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சோனோவால் தெரிவித்துள்ளார்.

இந்தியா கண்டனம்

இதற்கிடையே, தனது குடிமக்கள் மூவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றபோது இந்தியர்கள்மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய இத்தாக்குதல் கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட இந்தியா, புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரை நேரில் வரவழைத்துத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தது.

அத்துடன், மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் ஒரு கப்பல்மீது தாக்குதல்

இதனிடையே, ஓமானின் ஷினாஸ் துறைமுகத்தில் ‘எம்டி ஜல்வீர்’ எனும் கப்பல்மீது வியாழக்கிழமை (ஜூன் 11) தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

“நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். மேல்விவரங்களுக்காக உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருகிறோம்,” என்று ஓமானிலுள்ள இந்தியத் தூதரகம் சமூக ஊடகம் வழியாகத் தெரிவித்துள்ளது.

அக்கப்பலில் இந்தியக் கடலோடிகள் இருந்தனரா என்பதைத் தூதரகம் குறிப்பிடவில்லை.

ஒரே வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது தாக்குதல் இது. முன்னதாக, அமெரிக்கா தாக்கிய எம்டி மெரிவெக்ஸ் எனும் கப்பலிலும் இந்தியக் கடலோடிகள் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஅமெரிக்காதாக்குதல்எண்ணெய்க் கப்பல்கடற்படை