ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்து சென்ற மூன்று இந்தியக் கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்து சென்ற மூன்று இந்தியக் கப்பல்கள்

2 mins read
ba796d96-99d9-442c-bd4b-e29660d45c2f
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டவுடன் ஜூன் 19ஆம் தேதி மூன்று இந்தியக் கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் நிலவிவரும் சூழலில் ஹோர்முஸ் நீரிணையை மூன்று இந்தியக் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து சென்றதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “94 இந்திய மாலுமிகளுடன் மொத்தம் 8.6 லட்சம் மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச்சென்ற ‘தேஷ் வைபவ்’, ‘தேஷ் விபூர்’, ‘சன்மார் ஹெரால்ட்’ ஆகிய மூன்று இந்தியக் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து தற்போது இந்தியாவை நோக்கி வருகின்றன. அவற்றின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதற்கு மத்திய அரசு உச்சக்கட்ட முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறிய அவர், இந்தியாவின் மாலுமிகள் மற்றும் எரிசக்தித் தேவைகளின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் தங்களது அமைச்சு தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

37 மாலுமிகளுடன் 2,86,572 மில்லியன் டன் சரக்கு ஏந்திய தேஷ் வைபவ் கப்பல், ஜூன் 24 அன்று குஜராத்தின் வாடினார் பகுதியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27 மாலுமிகளுடன் 2,88,893 மில்லியன் டன் சரக்கு ஏந்திய தேஷ் விபூர், அதே நாளான புதன்கிழமை (ஜூன் 24) குஜராத்தின் சிக்கா பகுதிக்கு வரவுள்ளது.

முப்பது மாலுமிகளுடன் 2,85,400 மில்லியன் டன் சரக்கு ஏந்திய சன்மார் ஹெரால்ட், ஜூலை 1ஆம் தேதி ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தை வந்தடையும் எனத் தெரிகிறது.

அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையே போரை முடிவுக்குக் கொண்டு வரவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பலாவு நாட்டுக்கொடியுடன் சென்ற கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற ஜி7 உச்சநிலை மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தை முக்கியமாக எழுப்பியிருந்தார்.

ஆனால், லெபனான்மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்