புதுடெல்லி: ஈரானில் இவ்வாண்டு மே மாதம் மாயமானதாகக் கூறப்பட்ட இந்திய இளையர்கள் மூவரை அந்நாட்டுக் காவல்துறை மீட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர், ஹோஷியார்பூர் எஸ்பிஎஸ் நகர் ஆகிய பகுதிகளிலிருந்து ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் ஆகிய மூவரும் ஈரானுக்குக் கடந்த மே மாதம் சென்றனர்.
அங்கு அவர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகளும் தேடும் வேட்டையில் இறங்கினர்.
அவர்கள் கடத்தப்பட்டதாகவும் அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் பணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மாயமானவர்களை ஒரு மாதத் தேடுதலுக்குப் பிறகு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டுக் காவல்துறை மீட்டது.
இந்தியர்கள் மூவர் ஈரானில் மீட்கப்பட்ட தகவலை இந்தியாவில் இருக்கும் ஈரானியத் தூதரகம் எக்ஸ் தளம் வழியாகத் தெரிவித்தது.

