ஜெர்மனியில் கேரளாவைச் சேர்ந்த மூவர் கருகி மரணம்: தீ மூட்டியதாக ஆடவர் கைது

ஜெர்மனியில் கேரளாவைச் சேர்ந்த மூவர் கருகி மரணம்: தீ மூட்டியதாக ஆடவர் கைது

படம்: என்டிடிவி

15 Oct 2026 - 10:15 pm

2 mins read

பெர்லின்: ஜெர்மனியில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் பெண்கள்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த நோவா சாபு, 25, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலி ஷீலா ஜோய், 25, எர்ணாகுளம் மாவட்டம் காலடியைச் சேர்ந்த சிவின் ஜானி, 26, ஆகியோர் உயிரிழந்த மூவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் போச்சும் நகரின் ஹோஃப்ஸ்டெட் மாவட்டத்தில் உள்ள போஸ்ட்ஸ்ட்ராஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

அதே கட்டடத்தில் வசிக்கும் 41 வயதான ருமேனிய நாட்டவரை ஜெர்மன் காவல்துறை கைது செய்துள்ளதாக, ஜெர்மன் செய்தி நிறுவனமான டிபிஏவை மேற்கோள் காட்டி என்டிவி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தீ விபத்துச் சம்பவம் கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்டவர் கொலை செய்யும் நோக்கில் தீயை மூட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளதாக போச்சும் நகர காவல்துறையின் பேச்சாளர் ஊடகங்களிடம் கூறினார்.

இரண்டாவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து மூன்று உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் ஐவர் காயமடைந்தனர். கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்தனர். அந்த மாணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தை விசாரித்த அதிகாரிகள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை எனத் தெரிவித்ததோடு இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட தீ எனச் சந்தேகிக்கின்றனர்.

கட்டடத்தின் தரைத் தளத்தில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது. கட்டடத்திலிருந்து வெளியேறும் முக்கிய வழியான மரப் படிக்கட்டுகள் வழியாக மேல் மாடிகளுக்குத் தீ பரவியது.

தீச்சம்பவம் நடப்பதற்கு முன்தினம் குடியிருப்பாளர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக அருகில் வசிப்பவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்