லாரியில் பூக்களில் மறைத்து மூன்று கிலோ கஞ்சா கடத்தல்; மதுரையில் இருவர் கைது

1 mins read
5b2c30ce-8177-4a5d-82d1-713b0b8f2c5b
கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக இருவர் கைதாகியுள்ளனர். - கோப்புப் படம்: இந்தியா

மதுரை: ஆந்திராவில் இருந்து லாரியில் பூக்களில் மறைத்து எடுத்து வந்த மூன்று கிலோ கஞ்சாவை மதுரையில் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைதாகினர்.

மதுரை குலமங்கலம் ரோட்டில் லாரி ஒன்றை மதுவிலக்கு காவல்துறை சோதனையிட்டது. ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் பூக்களுடன் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக திருப்புவனம் ஆதீஸ்வரன் 29, துாத்துக்குடி ஒட்டப்பிடாரம் வேல்முருகன் 21 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவான நெல்லை கணேசன் என்ற குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பேசிய காவல்துறை, ஆதீஸ்வரன் மீது மணல் திருட்டு, நகை திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் ஆவரங்காடு பகுதி அக்னி நிறுவனத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் தங்கராஜ் தலைமையில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதீஸ்வரன் லாரி ஓட்டுநராகவும் இருக்கிறார். இவரிடம் கிளீனராக சேர்ந்த வேல்முருகன் கூட்டாளியாக மாறினார். இவர் மீதும் கஞ்சா, அடிதடி வழக்குகள் உள்ளன என்று கூறியது.

“ஆதீஸ்வரன் பள்ளி நண்பர் ரித்தீஷ் மூலம் நெல்லை கணேசன் அறிமுகமானார். இவர் கஞ்சா மொத்த விற்பனையாளர். கணேசன் அறிவுரைப்படி ஆந்திராவில் 5 கிலோ கஞ்சாவை வாங்கிக்கொண்டு ஆதீஸ்வரனின் மைத்துனர் மணிகண்டனின் லாரியில் மதுரை திரும்பினர். வரும் வழியில் 2 கிலோ கஞ்சாவை கணேசன் நண்பருக்கு கொடுத்துள்ளனர். மீதி 3 கிலோ கஞ்சாவுடன் வரும்போது இருவரையும் கைது செய்தோம்,” என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்