புதுடெல்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை பலமடங்கு அதிகரிக்கும் வகையில் 75 விழுக்காட்டுக்கு மேல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மூன்று புதிய அதிநவீன போர்க்கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இந்தியக் கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கப்படுகின்றன.
கோல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெறும் மாபெரும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் மூன்று கப்பல்களும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.
மத்திய அரசின் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின்கீழ், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் இக்கப்பல்களை வடிவமைத்துள்ளது.
கோல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் எஞ்சினியர்ஸ்’ இந்த மூன்று கப்பல்களையும் உருவாக்கியுள்ளது.
ஒரே நேரத்தில் வெவ்வேறு திறன்களைக் கொண்ட மூன்று முன்னணிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஐஎன்எஸ் தூனாகிரி, ‘புராஜெக்ட் 17ஏ’ திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட 5வது அதிநவீன ஸ்டெல்த் ஃபிரிகேட் வகைப் போர்க்கப்பல் ஆகும். எதிரி நாடுகளின் ரேடார் கண்களில் படாமல் கடலில் மறைந்து பயணிக்கும் தனித்துவ வடிவமைப்பைக் கொண்டது.
இதில் எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், நடுத்தரத் தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல்களின் கட்டுமானத்தில் 75 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருள்களும் தொழில்நுட்பங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டத்தின்மூலம் இந்தியாவின் 200க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளையும் பொருளியல் பயன்களையும் பெற்றுள்ளன.
சீனா, பாகிஸ்தான் நாடுகளின் கடல்சார் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் வேளையில், மூன்று நவீன கப்பல்களின் வருகை இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

