இந்தூர் விபத்தில் முன்னாள் அமைச்சரின் மகள் உட்பட மூவர் மரணம்

1 mins read
30a1f567-5f97-4aa2-9995-0f42c172a410
விபத்தில் உயிரிழந்த பிரேர்னா பச்சன். - படம்: என்டிடிவி

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) அதிகாலை நடந்த சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

அதிவேகமாகச் சென்ற கார் ஒரு லாரியை மோதியதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

அந்த காரில் நால்வர் பயணம் செய்தனர். அவர்களில் மாநில உள்துறையின் முன்னாள் அமைச்சர் பாலா பச்சனின் மகள் பிரேர்னா பச்சனும் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பேச்சாளர் ஆனந்த் காஸ்லிவாலின் மகன் பிரகார் காஸ்லிவாலும் அடங்குவர்.

விபத்தில் மாண்ட மூன்றாமவர் மானா சந்து என்று அடையாளம் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறின. அதே காரில் பயணம் செய்த நாலாவது பயணியான அனுஷ்கா ரதிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தூரின் ராலாமண்டல் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் இவ்விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டது.

பிரகார் காஸ்லிவாலின் பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு அந்த நால்வரும் இந்தூருக்குத் திரும்பிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

பிரகார் மது அருந்திவிட்டு காரை ஓட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதியதாக அது சொன்னது.

சம்பவம் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மத்தியப் பிரதேச மாநில முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், விபத்தில் மாண்டோருக்கு இரங்கல் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்