மீரட்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்துப் பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஸாகிர் காலனியில் உள்ள அந்த மூன்று மாடிக் கட்டடம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) மாலை 5.15 மணியளவில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
தேசியப் பேரிடர் நிர்வாகப் படை, தீயணைப்புப் படை, காவல்துறை ஆகியவற்றின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
முன்னதாக, கட்டடம் இடிந்தபோது 15 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது. அவர்களில் 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆனால், அவர்களில் பத்துப் பேர் இறந்துவிட்டதாக மாவட்ட நிர்வாகம் ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் 6 வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
காயமுற்ற நால்வர் லாலா லஜபதி ராய் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் நஃபோ அலாவுதீன், தரைத்தளத்தில் பண்ணை நடத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கட்டட இடிபாடுகளில் 20க்கு மேற்பட்ட எருமைகளும் சிக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது.
நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அக்கம்பக்கக் குடியிருப்பாளர்களும் மீட்புப் பணியில் காவல்துறையினர்க்கு உதவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்தப் பகுதியில் குறுகலான பாதைகள் அமைந்திருப்பதால் மண் அள்ளும் இயந்திரங்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்த இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.