நடுவானில் நோய்வாய்ப்பட்ட மூன்று விமானிகள்

நடுவானில் நோய்வாய்ப்பட்ட மூன்று விமானிகள்

2 mins read
b25c3b2b-4198-4fe2-8871-fc207c7914b5
பிரிட்டி‌ஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று. - மாதிரிப் படம்: ‌ஷட்டர்ஸ்டாக்

புதுடெல்லி: பிரிட்டி‌ஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் நடுவானில் விமானிகள் மூவரும் நோய்வாய்ப்பட்டனர்.

இச்சம்பவம் புதன்கிழமை (ஜூலை 22) இந்தியாவின் ஹைதராபாத் நகரிலிருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் நிகழ்ந்தது. விமானிகள் மூவரும் அன்று காலை உணவு உட்கொண்ட பிறகு நச்சுணவால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் ஆபத்துக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்பட்டது.

ஒருவரின் உடல்நிலை மோசமடைந்தது

பாதிக்கப்பட்ட விமானிகளில் ஒருவரின் நிலை மிக வேகமாக மோசமடைந்தது. நடுவானில் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி உதவவேண்டியிருந்தது.

இச்சம்பவம் குறித்து பிரிட்டி‌ஷ் ஏர்வேஸ் விசாரணை நடத்திவருகிறது.

சம்பந்தப்பட்ட BA 276 என்ற எண்ணைக் கொண்ட விமானம் காலை 7.45 மணிக்குள் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. அது 10 மணிநேரம் 35 நிமிடங்களில் லண்டனைச் சென்றடையும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

பயணம் தொடங்குவதற்கு முதல் நாள் விமானிகள் மூவரும் ஹைதராபாத்தில் சாதாரண ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அங்கு இளைப்பாறும் வளாகத்தில் (lounge) காலை உணவை உட்கொண்ட பிறகு அவர்கள் பயணத்தைத் தொடங்கினர்.

விமானம் 30,000 அடிகள் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானிகளில் ஒருவருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டதாக அனைத்துலகச் செய்தி ஒன்று தெரிவித்தது.

12 மணிநேர அறுவை சிகிச்சை

லண்டனைச் சென்றடைந்தவுடன் அந்த விமானி அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு 12 மணிநேரத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹோட்டலில் உண்ட காலை உணவுடன் சேர்ந்து விமானிகள் வேறு நிறுவனம் தயாரித்த போத்தல் நீரை அருந்திருந்தியுள்ளனர். மோசமாக நோய்வாய்ப்பட்ட ஒருவரைத் தவிர மற்ற விமானிகளின் நிலை அவ்வளவு மோசமாக இல்லை.

அவர்கள் இருவரும் விமானத்தைத் தொடர்ந்து இயக்கினர். விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.05 மணிக்கு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் தரையிறங்கியது.

அந்த இரு விமானிகளும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்