திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றிய ‘மூன்று ரோஜா பெண்கள்’ கைது

திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றிய ‘மூன்று ரோஜா பெண்கள்’ கைது

1 mins read
efb2507f-5e28-4caf-b3c3-8b43665d1ff9
(இடமிருந்து) குஷ்பு, மீனாட்சி, லட்சுமி. - படம்: இந்து தமிழ் திசை

புதுவை: தென்னிந்தியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘த்ரீ ரோசஸ்’ (மூன்று ரோஜா பெண்கள்) என்ற பெயரில் இயங்கிவந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் புதுவையில் சிக்கினர்.

மக்கள் கூட்டமாக உள்ள இடங்களில் அனைவரது கவனத்தையும் திசைதிருப்பித் திருடுவதில் மூவரும் கைதேர்ந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் அதிக அளவில் கைவரிசை காட்டிவந்த இந்தத் திருட்டுக் கும்பலுக்கு காவல்துறையினர்தான் ‘த்ரீ ரோசஸ்’ என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.

அண்மையில் சென்னை தியாகராய நகரில் கைவரிசை காட்டிய பின்னர் தப்பியோடிய மூவரும் புதுவையில் சுற்றிக்கொண்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அவர்களின் புகைப்படங்களைத் தமிழக, ஆந்திரக் காவல்துறையினர் புதுவைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, புதுவையில் தேடுதல் வேட்டை நீடித்தது. அங்கு பெரிய துணிக்கடை ஒன்றில் மூவரும் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் மாறு வேடத்தில் அங்கு சென்று மூன்று ரோஜாக்களையும் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் மூவரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு, மீனாட்சி, லட்சுமி என்று தெரிய வந்தது.

மூவரும் பல்வேறு நகரங்களில் திருட்டில் ஈடுபட்டதாகவும் இதன்மூலம் சொந்த மாநிலத்தில் வீடு, கார், நிலம் உள்ளிட்ட ஏராளமான சொத்துகளை வாங்கி வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மூவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்