மும்பை விமான நிலையத்தில் மூன்று ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானங்கள் திடீர் ரத்து

மும்பை விமான நிலையத்தில் மூன்று ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானங்கள் திடீர் ரத்து

1 mins read
04a8f9b2-1fd4-40d0-885a-d479ada7cae4
‘ஸ்பைஸ்ஜெட்’ விமானங்கள் திடீரென ரத்தானதால், சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் பெரும் பதற்றம் நிலவியது. - படம்: kirtikhandelwa7/ எக்ஸ் தளம்
Google News Preferred Icon

மும்பை: சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் குறைந்தது மூன்று ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.

வியாழக்கிழமை (ஏப்ரல் 30) நடந்த அச்சம்பவத்தால் பெரும் குழப்பம் நிலவியது. இதனால் பயணிகள் செய்வதறியாது திகைத்ததோடு, மாற்று வழிகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டது.

விமான நிலைய வட்டாரங்களின்படி, எஸ்ஜி 631 (மும்பை-டெல்லி), எஸ்ஜி 553 (மும்பை-கோரக்பூர்), எஸ்ஜி 669 (மும்பை-பெங்களூரு) ஆகிய விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

உதவி மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் கட்டணத்தைத் திரும்பப் பெறுதல், மாற்றுப் பயண நேரத்தை திட்டமிடுதல் ஆகியவற்றில் குழப்பம் நிலவியதாகவும் கூறப்பட்டன.

மேலும், விமான நிறுவன ஊழியர்களிடமிருந்து போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

துபாயில் இருந்து வந்த ‘ஸ்பைஸ்ஜெட்’டின் எஸ்ஜி114 விமானத்தில் வந்த பயணிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த அந்த விமானம் மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு விமானங்கள் புறப்பட்ட பிறகு தரையிறங்கியதால், பல பயணிகள் தங்களின் அடுத்தகட்டப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து ‘ஸ்பைஸ்ஜெட்’ பேச்சாளர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்தத் தடங்கல்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விமானம்ரத்துஸ்பைஸ்ஜெட்