மும்பை: இந்தியாவின் மும்மை நகரில் சால் (chawl) என்றழைக்கப்படும் வசதி குறைந்தோருக்கான மூன்று தள அடுக்குமாடி வீட்டுக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
அந்நகரின் மேற்குப் பகுதியில் உள்ள பேண்ட்ரா குடியிருப்பு வட்டாரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது, குறைந்தது 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அரசாங்க அதிகாரிகள் கூறினர்.
இதுவரை இடிபாடுகளிலிருந்து 12 பேர் மீட்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர் என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. கிழக்கு பேண்ட்ராவில் உள்ள 37வது எண் சால் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜூலை 18) அதிகாலை இடிந்து விழுந்ததாக முதலில் வெளியான தகவல்கள் குறிப்பிட்டன.
சம்பவ இடத்தில் எட்டு தீயணைப்பு வாகனங்களும் மும்பை காவல்துறையைச் சேர்ந்த குழுக்களும் இருந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறினார் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
தேடல், மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் கூடுல் தகவல்கள் பெறப்பட்டுவருவதாகவும் அவர் சொன்னார்.
இடிந்து விழுந்த கட்டடத்தில் சமைக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள் கலன் வெடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வெடிப்புக்குப் பிறகு கட்டடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.
முன்னதாக சனிக்கிழமை (ஜுலை 12) தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நான்கு தளக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் அச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
அக்கட்டடத்திற்கு எதிரே இருக்கும் கட்டடத்தில் வசிக்கும் நால்வருக்கு இடிபாடுகள் சிதறியதால் காயம் ஏற்பட்டது.