பெங்களூரு: கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினர்மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்குட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) அதிகாலையில் அங்குச் சிலர் மானை வேட்டையாடியதாகக் கூறி வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி, 50, ஜான்ரோஸ் பீட்டர், 42, லாசர் குமார், 33, மூவரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மகிமை தாஸ், 48, மைசூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹனூர், கொள்ளேகால் பகுதிகளில் பொதுமக்கள் வனத்துறை அலுவலகங்களைச் சேதப்படுத்தியும் சாலைகளை மறித்தும் இரண்டு நாள்களாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டோரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்களும் மைசூரு மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட இளையர்கள் ஹனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வனத்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்குப் பதற்றம் ஏற்பட்டது.
குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில், ஹனூர் சட்டமன்ற உறுப்பினர் மஞ்சுநாதா, மைசூரு காவல்துறைத் தலைமை அதிகாரி (ஐஜி) போரலிங்கையா ஆகியோர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தொலைபேசி வாயிலாக அவர்களிடம் பேசினார். அதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி போர லிங்கையா, ‘‘உயிரிழந்த அந்தோணிசாமியின் மனைவி லூர்துமேரி அளித்த புகாரின்பேரில் வனத்துறையில் பணியாற்றும் ஏழு பேர்மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி, முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும். தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் மஞ்சுநாதா, ‘’அரசாங்கத்திடம் பேசி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல் பெற்றுள்ளேன். என் சார்பாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்குகிறேன்.
“குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் மாண்டோர் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கவும் கோரியுள்ளேன். அரசுத் தரப்பில் இந்தக் கோரிக்கைகளை ஏற்பதாகக் கூறியுள்ளார்கள்,’’ என்றார்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் உடற்கூராய்வுப் பரிசோதனைக்கும் உடல்களைப் பெற்றுக்கொள்ளவும் ஒப்புக்கொண்டனர்.
தமிழக முதல்வர் விஜய் கண்டனம்
இவ்வேளையில், கர்நாடக வனத் துறையினரால் தமிழர்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குத் தமிழக முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளப் பதிவில் அவர், இச்சம்பவம் தமக்கு வேதனை அளிப்பதாகவும் இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியதுடன் இச்சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும்; உயர்நிலை விசாரணைக் குழு அமைத்து, தவறு இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட திரு விஜய், இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


