பாட்னா: ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேப்பாளம் வழியாக, பீகார் மாநிலத்துக்குள் நுழைந்திருப்பதாக மத்திய உளவுத்துறை இந்திய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
மூன்று பேரையும் உளவுத்துறை அடையாளம் கண்டுள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க பீகார் காவல்துறை உச்ச விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவிகள் உயிரிழக்க நேரிட்டது. இதையடுத்து, இந்தியா மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் துடைத்தொழிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது.
இத்தகைய சூழலில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் மூன்று பேர் பாகிஸ்தானில் இருந்து நேப்பாளம் வழியாக, பீகார் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று பேரின் வரைபடங்களை பீகார் மாநிலக் காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்கள் பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டைச் சேர்ந்த ஆதில் உசேன், பகவல்பூரைச் சேர்ந்த முகம்மது உஸ்மான் என்றும் மூவரும் நேப்பாளத் தலைநகர் காத்மாண்டு சென்று, அங்கிருந்து பீகாருக்குள் நுழைந்துள்ளனர் என்றும் காவல்துறை கூறியது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள ரயில், பேருந்து, விமான நிலையங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது.