புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில காவல்துறை டிஜிபிக்கள் பஙகேற்கும் மாநாடு இம்மாதம் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மத்திய உளவுத்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இதுபற்றி ஒடிசா மாநில டி.ஜி.பி. யோகேஷ் பகதூர் குரானியா கூறுகையில், மூன்று நாள் மாநாட்டையொட்டி ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு, மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புவனேஸ்வரம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். கடந்த 2013ஆம் ஆண்டு வரையில் இந்த மாநாடு டெல்லியில் மட்டும் நடைபெற்று வந்தது. 2014 முதல் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு, இந்தியா முழுதும் எதிர்நோக்கப்படும் பாதுகாப்பு சவால்கள் குறித்து அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
டிஜிபி மாநாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு, இணையக் குற்றங்கள் மற்றும் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் ஏற்படும் சவால்கள், டிரோன்களின் அண்மைய அச்சுறுத்தல்கள், பயங்கரவாத எதிர்ப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

