தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று புலிகள், ஒரு சிறுத்தையின் உயிரைப் பறித்த கோழி

1 mins read
74d2e9a7-9152-467d-9f52-45d1b65ef06b
புலிகளும் சிறுத்தையும் பறவைக் காய்ச்சலால் இறந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. - மாதிரிப்படம்

நாக்பூர்: மூன்று புலிகளும் ஒரு சிறுத்தையும் இறக்க கோழி இறைச்சி காரணமாக அமைந்துவிட்டது.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள விலங்கியல் தோட்டத்தில் இருந்த அவ்விலங்குகளுக்குக் கோழி இறைச்சி கொடுக்கப்பட்டது என்றும் அதன்பின் பறவைக் காய்ச்சல் தொற்றி அவை இறந்திருக்கலாம் என்றும் மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) தெரிவித்தார்.

ஆயினும், ஆய்வகச் சோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் அதன்பின்னரே அவ்விலங்குகளின் இறப்பிற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் அவர் சொன்னார்.

இதனையடுத்து, விலங்குகளுக்கு உணவு வழங்குமுன் அவற்றைப் பரிசோதிக்கும்படி விலங்கியல் தோட்ட ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நான்கு விலங்குகள் மாண்டதை அடுத்து அந்த விலங்கியல் தோட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மனிதர்களைத் தாக்கியதை அடுத்து அப்புலிகளும் சிறுத்தையும் சந்திரபூரிலிருந்து நாக்பூருக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில், அவை நான்கும் கடந்த டிசம்பர் மாதம் மாண்டுபோயின.

அதனைத் தொடர்ந்து, அவ்விலங்குகளின் உடற்கூறு மாதிரிகள் சோதனைக்காக போபாலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இம்மாதம் 2ஆம் தேதி கிடைத்த சோதனை அறிக்கைகள், அவ்விலங்குகளை எச்5என்1 கிருமி தொற்றியதை உறுதிப்படுத்தின என்று கோரேவாடா திட்டப்பணியின் வட்டார நிர்வாகி ஷாத்தனிக் பக்வத் கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்தார்.

இருப்பினும், அறிவியல் ஆய்வகத்திலிருந்து இதுவரை தமக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று திரு நாயக் கூறியுள்ளார். விரிவான விசாரணைக்குப் பிறகே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்