தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பா.ஜனதா கட்சியின் அடுத்த தலைவர்; மூவரில் ஒரு பெண்மணிக்கு வாய்ப்பு

2 mins read
b7e2a84f-e10b-4548-b83d-66ac83306ef7
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக நிர்மலா சீதாராமன், ஆந்திர முன்னாள் முதல்வர் என் டி ராமராவ் மகள் புரந்தேஸ்வரி, மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவர் பதவி இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவராக 2020ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அமைச்சர் நட்டா தேர்வானார். கட்சி விதிகளின்படி ஒருவர் தலைவராக மூன்றாண்டுக்காலம் பதவி வகிக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு அவருடைய பதவி நீட்டிக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.

குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டா, மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்ததை அடுத்து மத்திய அமைச்சராக பதவியேற்றார். தற்போது அவர் சுகாதார அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், விரைவில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இம்முறை கட்சித் தலைவராக பெண்ஒருவர் தேர்வு செய்யப்படும் வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அந்த வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மத்தியில் மூன்று பேருடைய பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி ஆகியோரே அந்த மூவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி ஏற்கனெவே பாரதிய ஜனதா கட்சியின் தேசி தலைவராக இருந்துள்ளார். இவர் 2001- 02ல் ஓராண்டு காலம் கட்சியின் தேசியத் தலைவராக பதவி வகித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்