தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாம்பை மென்றே கொன்ற 3 வயதுச் சிறுவன்

1 mins read
3338ff71-d263-44f1-abea-8e4749ad59d4
சிறுவன் அக்‌ஷய்யும் அவன் மென்று துப்பிய குட்டிப் பாம்பும். படங்கள்: இந்திய ஊடகம் -

கான்பூர்: மூன்று வயதே நிரம்பிய குழந்தை, குட்டிப் பாம்பு ஒன்றை மென்று துப்பிய அதிசய, அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஃபரூக்காபாத் மாவட்டம், மத்னாபூர் எனும் சிற்றூரைச் சேர்ந்த அக்‌ஷய் என்ற அச்சிறுவன் அப்பாம்பை மென்று துப்பியதில், அது மாண்டுபோனது.

இதனைக் கண்டு திகிலடைந்த அச்சிறுவனின் பெற்றோர் மாண்ட குட்டிப் பாம்பையும் ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, தங்கள் மகனை டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். 24 மணி நேரம் குழந்தையைக் கண்காணித்தபின் அவனது உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

தினேஷ் குமார் என்பவரின் மகனான அக்‌ஷய் என்ற அச்சிறுவன் தமது வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது திடீரெனக் கத்தினான். இதனால் விரைந்து சென்ற அவனது பாட்டி, குட்டிப் பாம்பு ஒன்று அவனின் வாயில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் அக்‌ஷய்யின் வாயிலிருந்து அந்தப் பாம்பை எடுத்து கீழே வீசிவிட்டு, அவனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறினார். அவர்கள் உடனே அக்‌ஷய்யை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்தக் குட்டிப் பாம்பு நஞ்சில்லா வகையைச் சேர்ந்ததுபோல் தெரிகிறது என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.