தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேன் குண்டுவீச்சில் இந்தியர் உயிரிழப்பு

2 mins read
d9664d55-0a32-478a-b21d-46e8f1fcfad3
உக்ரேன் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சந்தீப், 36. - படம்: இந்திய ஊடகம்

திருச்சூர்: உக்ரேன் குண்டுவீச்சில் ரஷ்ய ராணுவக் குழுவில் இடம்பெற்றிருந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

சந்தீப், 36, என்ற அந்த ஆடவர் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர். சந்தீப்பின் மரணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்யாவிலுள்ள மலையாளிச் சங்கங்கள் தெரிவித்தன.

சந்தீப் இடம்பெற்றிருந்த 12 பேர் கொண்ட ரஷ்ய ராணுவச் சுற்றுக்காவல் குழுவினர் அனைவரும் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாகவும் சந்தீப்பின் உடலை ரஷ்ய மலையாளிச் சங்கத்தைச் சேர்ந்தோர் அடையாளம் காட்டியதாகவும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சந்தீப் உள்ளிட்ட எட்டு மலையாளிகள், சாலக்குடியிலுள்ள ஒரு முகவை மூலமாக ரஷ்யா புறப்பட்டனர்.

அங்கு சென்றபின் மாஸ்கோவிலுள்ள ஓர் உணவகத்தில் பணியாற்றி வருவதாக சந்தீப் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர், ரஷ்ய ராணுவ முகாமிலுள்ள உணவகத்தில் தான் பணிபுரிந்து வருவதாகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதன்பிறகு, தன் கடப்பிதழையும் கைப்பேசியையும் தொலைத்துவிட்டேன் என்று சந்தீப் சொன்னதாக அவருடைய உறவினர்கள் கூறினர்.

சந்தீப் ரஷ்யக் குடியுரிமை பெற்று, அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்துவிட்டதாகவும் சொல்லப்படுவதாக ‘மனோரமா’ இணையச் செய்தி தெரிவிக்கிறது.

ரஷ்யக் குடியுரிமையைப் பெற அந்நாட்டு ராணுவத்தில் இணையும் வழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை சந்தீப் ரஷ்யக் குடியுரிமை பெற்றிருந்தால் அவரது உடலை இந்தியாவிற்குக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

ரஷ்யாவில் ராணுவப் பயிற்சி பெற்றுவந்ததால், சந்தீப் தன் குடும்பத்துடன் தொடர்பில் இருக்க முடியவில்லை. அவர் தொலைபேசி வழியாகக்கூட அழைக்கமாட்டார் என்று ரஷ்யாவிலுள்ள அவரது மலையாளி நண்பர்கள் கூறினர்.

ரஷ்ய மலையாளி வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பப்பட்ட செய்தியின் வழியாகவே சந்தீப் இடம்பெற்றிருந்த குழு தாக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் அறிந்தனர்.

இந்நிலையில், சந்தீப் குறித்த தகவல் கோரி, அவருடைய குடும்பத்தினர் இந்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர், சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். அத்துடன், வெளிநாடுவாழ் கேரள மக்கள் விவகாரத்துறை மூலமாகவும் ரஷ்யாவிலுள்ள இந்தியத் தூதரகத்தை அவர்கள் தொடர்புகொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்