ஓடும் ரயில்கள் மீது கல்லெறிந்தால் ஆயுள் சிறை: மீண்டும் எச்சரிக்கை

ஓடும் ரயில்கள் மீது கல்லெறிந்தால் ஆயுள் சிறை: மீண்டும் எச்சரிக்கை

1 mins read
e717f4b6-9f4a-4ea5-9780-96474f6cc3ff
கடந்த சில நாள்களாக இதுபோன்ற சம்பவங்கள் தலைதூக்கி உள்ளன. - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: ஓடும் ரயிலின் மீது கற்களை வீசுவது குற்றச்செயலாகக் கருதப்படும் என தெற்கு ரயில்வே மீண்டும் எச்சரித்துள்ளது.

தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் இத்தகையச் செயலில் ஈடுபடுவோர்க்கு இந்திய தண்டனை சட்டத்தின் 152வது பிரிவின்கீழ், பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் சிறைவாசம் வரை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

ஓடும் ரயில்கள் மீது கற்கள் அல்லது ஆபத்தான பொருள்களை வீசும் சம்பவம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை, ரயில்கள் மீது கல் எறிந்ததற்காக 102 பேரும் தண்டவாளத்தில் ஆபத்தான பொருள்களை வைத்ததற்காக 33 பேரும் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தெற்கு ரயில்வே இதுதொடர்பாக பல அறிக்கைகள் வெளியிட்டது.

ஓடும் ரயில் மீது கற்களை வீசும்போது ரயிலில் பயணம் செய்யும் முதியவர்கள், சிறார்கள் எனப் பலர் படுகாயம் அடைகிறார்கள் என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதுடன், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்தது.

எனினும், கடந்த சில நாள்களாக இதுபோன்ற சம்பவங்கள் தலைதூக்கி உள்ளன. எனவே, ரயில்வே பாதுகாப்புத் துறையும் அரசு ரயில்வே காவல்துறையும் சுற்றுக்காவல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்