சூரத்: பயணச்சீட்டு இல்லாமல் இளையர் ஒருவர் ரயிலில் பயணம் செய்ததைக் கண்டுபிடித்த பயணச்சீட்டுப் பரிசோதகர், அவரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டார்.
இதனால், சந்தீப் ஆர்யா என்ற 21 வயது இளையர் படுகாயமடைந்தார்.
இந்தியாவின் குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக வியாழக்கிழமை (பிப்ரவரி 13) காவல்துறை தெரிவித்தது.
வாப்பியிலுள்ள ஓர் ஆலையில் பணிபுரியும் சந்தீப், தம் நண்பர் அஜய் குமாருடன் கடந்த செவ்வாய்க்கிழமை பிலாடுக்குச் சென்றார். கொதிகலனைப் பழுதுபார்க்கத் தேவையான சில துணைக்கருவிகளை வாங்குவதற்காக அவர்கள் அங்கு சென்றதாகக் கூறப்பட்டது.
அன்றிரவு பிலாட் ரயில் நிலையத்தை அடைந்த அவ்விருவரும் மும்பை - வல்சாத் ரயில் புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டனர். அதனால், பயணச்சீட்டு வாங்காமல் அவர்கள் அதில் ஏறிவிட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் கூறின.
வழியில் பயணச்சீட்டுப் பரிசோதகர் அசோக் கும்பரே, அவர்கள் இருவரும் பயணச்சீட்டு வாங்கவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதனால், ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு அவர் கேட்டார். ஆனால், நண்பர்கள் இருவரும் அதற்கு மறுக்கவே, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே, ரயில் வாப்பி நிலையத்தை அடைந்ததும் சந்தீப்பும் அஜய்யும் அதிலிருந்து இறங்க முயன்றனர். ஆனால், அவர்களை வல்சாத் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைக்க விரும்பிய அசோக், அதுவரை அவர்கள் ரயிலிலேயே தன்னுடன் வரவேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனாலும், அவர்கள் விடாமல் வாக்குவாதம் செய்ததால் கோபமடைந்த அசோக், பலித்தா ரயில் சந்திப்பு அருகே சந்தீப்பை ரயிலிலிருந்து தள்ளிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அஜய் உடனே அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, சந்தீப் விழுந்த இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தார். கடுமையாகக் காயமடைந்த சந்தீப் உடனடியாக வல்சாத் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் குஜராத் ரயில்வே காவல்துறை பயணச்சீட்டுப் பரிசோதகர் அசோக்கைக் கைதுசெய்து, விசாரித்து வருகிறது.

