இடுக்கி: ஏலக்காய்த் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த உரக்குழிக்குள் புலியும் நாயும் சிக்கிக்கொண்ட சம்பவம் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை நிகழ்ந்தது.
குழியிலிருந்து மேலேற வேண்டும் என்ற கவலை புலிக்கு; ஆனால், மேலேயும் வரவேண்டும், புலியிடமிருந்தும் தப்ப வேண்டும் என நாய்க்கோ இரட்டைக் கவலை.
தனக்கு இரையாக்கிக்கொள்வதற்காக நாயைப் புலி விரட்டிச் சென்றபோது அவையிரண்டும் குழிக்குள் மாட்டிக்கொண்டன.
அவற்றைக் குழிக்குள்ளிருந்து மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முதலில் மயக்க ஊசி செலுத்தி புலியை மீட்பது அவர்களது திட்டம்.
குழிக்குள்ளே இரு விலங்குகளும் ஒன்றுக்கொன்று அருகில் அமர்ந்தபடி இருக்கும் படம் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
குழிக்குள்ளிருந்து புலியின் உறுமல் சத்தம் கேட்டதை அடுத்து, அக்கம்பக்கக் குடியிருப்பாளர்களும் தோட்டத் தொழிலாளர்களும் விழிப்படைந்தனர். உடனடியாக அவர்கள் அதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.
குழியின் ஆழம் கிட்டத்தட்ட 15 அடி ஆழம் என்பதால் புலியில் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுவரையிலும் நாயைப் புலி ஒன்றும் செய்யவில்லை என்றும் அவையிரண்டும் காயமடைந்ததாகவும் தெரியவில்லை என்று கோட்டயம் வனத்துறை அதிகாரி என். ராஜேஷ் கூறினார்.
தமிழ்நாடு வனப் பாதுகாப்புப் பகுதிக்கும் பெரியார் சரணாலயத்திற்கும் இடைப்பட்ட அப்பகுதியில் வழக்கமாகப் புலிகளின் நடமாட்டம் இராது எனக் கூறப்பட்டது.

