மத்திய பிரதேசத்தின் காட்டுப்பகுதிக்குள் சென்ற 62 வயது ஆடவரை புலி ஒன்று கொன்றுள்ளது.
அந்தச் சம்பவம் ராய்சன் மாவட்டத்தில் உள்ள ஒபிடுல்லாகாஞ்ச் பகுதியில் நடந்தது. அது போப்பால் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
புலிகளைக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் அவற்றைத் திருப்பி காட்டுக்குள் அனுப்பவும், காட்டுப்பகுதி அதிகாரிகள் அந்தப் பகுதியில் 40 கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தியுள்ளதாக ‘டைம்ஸ் அஃப் இந்தியா’ அறிக்கை ஒன்று தெரிவித்தது.
சூரியன் மறைந்த பிறகு காட்டுக்குள் செல்லவேண்டாம் என்று கிராமவாசிகளிடம் கூறப்பட்டுள்ளது.
புலி நடமாட்டம் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
புலியால் தாக்கப்பட்ட மணிராம் ஜாதவ் இலைகளைச் சேகரிக்க காட்டுப்பகுதிக்குள் தனியாகச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் குனிந்தவாறு இலைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தபோது, புலி அவரை நான்கு கால் உள்ள மிருகம் என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் என்று காட்டுப்பகுதி அதிகாரிகள் கூறினர்.
மணிராம் வீடு திரும்பாததால், அவரைக் கண்டுபிடிக்க தேடல் குழு பணியில் அமர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரின் உடல் புதர்களில் கண்டெடுக்கப்பட்டது. பாதி உடலைப் புலி தின்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

