திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்களை வேறு துறைக்கு மாற்ற ஆந்திர அரசிடம் பரிந்துரை வைக்கப்பட இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பிஆர் நாயுடு இந்த மாதத் தொடக்கத்தில் பதவி ஏற்றார்.
அதன் பின்னர் திங்கட்கிழமை (நவம்பர் 18) திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறநிறுவன அமைப்பின் முதல் கூட்டம் திருமலையில் உள்ள அன்னம்மையா பவனில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் 80 அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதில் ஒன்றாக, திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்யும் இந்து அல்லாத ஊழியர்கள் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்ப அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.
இந்து அல்லாத ஊழியர்களை வேறு துறைகளுக்கு மாற்றவும் விருப்ப ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்ளவும் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

