திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக டோக்கன் வாங்க ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர்.
இந்த நிலையில் விபத்து காரணமாக திருப்பதி மாவட்ட மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள பல முக்கிய அதிகாரிகளின் தலை உருளுகிறது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர பிரதேச அரசாங்கம், இரு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து மூன்று அதிகாரிகளை இடமாற்றியது.
திரு நாயுடு புதன்கிழமை அன்று சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வா் சந்திரபாபு நாயுடு, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் மிகவம் வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்றபோது அங்கு பணியில் இருந்த டி.எஸ்.பி. ரமண குமாா், கோசாலை இயக்குநா் ஹரிநாத் ரெட்டி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்னர்.
தொடர்புடைய செய்திகள்
திருப்பதி இணை செயல் அதிகாரி கெளதமி, திருப்பதி எஸ்.பி. சுப்பா ராயுடு, திருமலை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி எஸ்.ஸ்ரீதர் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாள்கள் வைகுண்ட வாயில் தரிசனத்தை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இதற்கான இணையவழி முன்பதிவுகள் முன்பே அளிக்கப்பட்ட நிலையில், நேரடியாக வரும் பக்தா்களுக்காக திருப்பதியில் 8 இடங்களிலும் திருமலையில் ஓரிடத்திலும் என 9 இடங்களில் 94 முகப்புகள் அமைக்கப்பட்டு தரிசன நுழைவுச் சீட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
முதல் மூன்று நாள்களுக்கான தரிசன நுழைவுச் சீட்டுகள் வியாழக்கிழமை (ஜனவரி 9) அதிகாலை வழங்கப்படுவதாக இருந்தது.
ஆனால் புதன்கிழமை அன்றே கூட்டம் அலை மோதியதால் இரவு 10 மணி முதல் நுழைவுச் சீட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி, புதன்கிழமை இரவு முகப்புகள் திறக்கப்பட்டவுடன் பக்தா்கள் ஒரே நேரத்தில் வரிசையில் நுழைய முயற்சி செய்தனர்.
திருப்பதியில் சீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பைராகி பட்டேடாவில் உள்ள முகப்புகளில் நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 38 போ் மயக்கமடைந்தனா். இவா்களில் ஐந்து பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். இவா்கள் சேலத்தைச் சோ்ந்த மல்லிகா, கேரளத்தைச் சோ்ந்த நிா்மலா, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரஜனி, லாவண்யா, சாந்தி, நா்சிபட்டினத்தைச் சோ்ந்த நாயுடுபாபு என்பது தெரிய வந்துள்ளது.

