புதுடெல்லி: திருப்பதி லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ‘சுக்ருதி புட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உயர்ரகப் பசு நெய் என்ற பெயரில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பல்வேறு ரசாயனங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட நெய் விநியோகிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
பாமோலின், பாம் கெர்னல் எண்ணெய் மற்றும் பல்வேறு வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி இந்த நெய் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பிலான கலப்பட நெய்யை இந்நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளது.
இந்த மோசடிக்குச் சுக்ருதி புட்ஸ் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களா முழுமையாக உடந்தையாக இருந்துள்ளார். கலப்படப் பொருட்களைக் கொள்முதல் செய்தது முதல், தனது தொழிற்சாலையில் போலி நெய்யைத் தயாரித்து, பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் அதை விநியோகித்தது வரை அவர் ஒருங்கிணைத்துச் செயல்பட்டுள்ளார் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்திலும் அவர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கைலாஷ் சந்த், விசாகப்பட்டினத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுத் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதே வழக்கில் ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி மில்க்’ நிறுவனத்தின் நிறுவனர் விபின் ஜெயின் ஏற்கெனவே கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
