திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

2 mins read
c53cf5f8-962e-4c99-8b17-0cb0eb24cd92
பவன் கல்யாண். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டுப் பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பும் மீன் எண்ணெய்யும் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

இது, ஏழுமலையான் பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பின்கீழ் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தக் குழு, விரைவில் விசாரணையைத் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த இ. ராமாராவ் என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

“கலப்படம் செய்யப்பட்ட நெய் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஆந்திர [Ϟ]துணை முதல்வர் பவன் கல்யாண் உறுதிபடக் கூறியுள்ளார். இதில் இந்துக்களின் மனம் புண்படும்படி அவர் பேசியுள்ளார். அவரது சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைத்தளங்களிலும் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும்,” என்று தமது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஹைதராபாத் சிவில் நீதிமன்ற தலைமை நீதிபதி ரேணுகா விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

அதோடு, நவம்பர் மாதம் 22ஆம் தேதி பவன் கல்யாண் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது தரப்பு நியாயத்தை விளக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்