முடிவுக்கு வந்த திருப்பதி லட்டு சர்ச்சை

முடிவுக்கு வந்த திருப்பதி லட்டு சர்ச்சை

1 mins read
e2b31255-1594-4bf8-a688-423732a65b0a
திருப்பதி லட்டு. - படம்: மாலை மலர்

அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு எதுவும் சேர்க்கப்படவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.

இதனால் இந்த விவகாரத்தில் முந்தைய ஆட்சியாளர்களைக் குற்றஞ்சாட்டிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தியதாக கடந்த 2024ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய் சுத்தமானதல்ல என்று, முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசைச் சாடினார்.

மேலும், மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பாக திருப்பதி லட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தகுந்த ஆதாரங்கள் இன்றி தனது குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் கூறியதற்காக உச்ச நீதிமன்றம் ஆந்திர முதல்வருக்கு கண்டனம் தெரிவித்தது.

மக்களின் சமய‌ நம்பிக்கை சார்ந்த விவகாரங்களில் அரசியல் தலையீடு கூடாது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், நெய் விவகாரம் குறித்து விசாரணை‌ நடத்தி சிபிஐ இயக்குநரின் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், பரிசோதிக்கப்பட்ட திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடு எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனத் தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்