திருமலை: திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா எனக் கண்டறிய புதிய கருவி ஒன்றை தேசிய பால்வள வாரியம் நன்கொடையாக அளித்துள்ளது.
ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அக்கருவியின் மதிப்பு ரூ.70 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாக சில மாதங்களுக்குமுன் அதிர்ச்சித் தகவல் வெளியானது. தற்போது அவ்விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், நெய்யின் தூய்மைத்தன்மை குறித்து கண்டறிவதற்கான அதிநவீன இயந்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அது அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் எனச் சொல்லப்படுகிறது.
“திருப்பதி கோவிலில் நாள்தோறும் 14,000 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக ஆண்டுதோறும் ரூ.200 கோடி மதிப்பில் ஏறக்குறைய 5,000 டன் நெய் வாங்கப்படுகிறது. இந்நிலையில், நெய்யில் கலப்படம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, ரூ.70 லட்சம் மதிப்புள்ள அதிநவீன ஜெர்மன் இறக்குமதி இயந்திரங்களை தேசிய பால்வள வாரியம் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அக்கருவி மூலம் சோதனையோட்டம் நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கடலை மாவு, திராட்சை, முந்திரி, ஏலக்காய், சீனி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் சோதனை செய்யப்படும் என்றும் தனியாக ஓர் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.