திருப்பதி: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) ‘மகா சாந்தி ஹோமம்’ நடத்தப்பட்டது.
அக்கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, கோவிலைத் தூய்மைப்படுத்தி புனிதத்தன்மையை மீட்டெடுக்கும் நோக்கில் அந்த ஹோமம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் உள்ளிட்ட அதிகாரிகளும் பூசாரிகளும் அந்த ஹோமத்தில் பங்கேற்றனர். நெய்யில் செய்யப்பட்ட கலப்படத்தால் விளைந்த பாவத்தைப் போக்கும் வகையில், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள யாகசாலையில் மூன்று ஹோமகுண்டங்கள் நிறுவப்பட்டு, ஹோமம் நடத்தப்பட்டது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியபடி, ஆகம ஆலோசகரிடமும் தலைமை ஜீயங்கரிடமும் ஆலோசனை கேட்டு, அதன்படி ‘சாந்தி ஹோமம்’ நடத்த முடிவுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், கோவிலை முழுமையாகத் தூய்மைப்படுத்தும் நோக்கில், கோவில் முழுவதும் பஞ்சகவ்யா தெளிக்கப்படும் என்றும் சியாமளா ராவ் அறிவித்துள்ளார்.
“அந்தத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வை அடுத்து, இந்துக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த நடவடிக்கைகள் உதவும் என நம்புகிறோம்,” என்று ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
முந்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, நெய்க்குப் பதிலாக விலங்குக் கொழுப்பும் தரமற்ற பொருள்களும் பயன்படுத்தப்பட்டு திருப்பதி லட்டு செய்யப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார். அதற்கு ஆதாரமாக, தனியார் நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளும் காட்டப்பட்டன.
ஆனால், அக்குற்றச்சாட்டை மறுத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, அரசியல் லாபத்திற்காக சந்திரபாபு நாயுடு எத்தகைய கீழ்த்தரமான செயலிலும் ஈடுபடுவார் என்று சாடியது. அத்துடன், இவ்விவகாரத்தில் நீதிமன்றக் கண்காணிப்புடன் விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி, ஆந்திர உயர் நீதிமன்றத்திலும் அக்கட்சி மனு அளித்துள்ளது.