கோல்கத்தா: கோல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து ஆளும் திரிணாமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜவஹர் சர்கார் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) பதவி விலகியுள்ளார்.
மேற்குவங்கத்தின் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் இந்தியாவெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர்கள், அரசியல் தலைவர் உட்பட சமூகத்தின் பல தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மத்திய புலன் அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே மேற்குவங்க அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதுகுறித்து ஜவ்கர் சிர்கார், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“ஊழல் பற்றியும் கட்சியின் சில பிரிவு தலைவர்களிடம் அதிகரித்து வரும் வலுவான ஆயுத உத்திகள் குறித்தும் மாநில அரசு அக்கறை காட்டாததால் நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்தேன். ஊழல் அதிகாரிகள் (அல்லது மருத்துவர்கள்) உயர் மற்றும் முக்கிய பதவிகளைப் பெறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேற்குவங்க அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. எனது அனுபவத்தில் இது போன்ற சம்பவத்தை நான் பார்த்தது இல்லை.
“ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த பயங்கரமான சம்பவத்தில் இருந்து ஒரு மாத காலமாக நான் பொறுமையாக இருந்தேன். மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மம்தாவின் பழைய பாணியில் அவர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. அரசு தாமதமாகத்தான் நடவடிக்கை எடுக்கிறது. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி உடன் தனிப்பட்ட முறையில் பேச முயற்சி செய்தேன். அதுவும் நடக்கவில்லை,” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இருந்து விலகுவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விதத்தை மம்தா பானர்ஜி கையாண்ட விதம் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது. கட்சியைச் சேர்ந்த சாந்தனு சென், அரசு நடத்தும் மருத்துவமனையின் நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்ததால் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதே போல் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து சேகர் ரே கோல்கத்தா மருத்துவர் கொடூரக் கொலை வழக்கில் காவல்துறை விசாரணை குறித்து கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

